Tuesday, April 23, 2019

பழமொழி நானூறில் காணலாகும் கல்விகுறித்த சிந்தனைகள்

 முனைவர் ப.செல்வி
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி
கோவை-641044

பழமொழி நானூறில் காணலாகும் கல்விகுறித்த சிந்தனைகள்

முன்னுரை

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று  பழமொழி நானூறு. நானூறு பாடல்களை உடையதாலும் ஒவ்வொறு பாடலின் இறுதியலும் ஒரு பழமொழியைக் கொண்டுள்ளதாலும் இந்நூல் பழமொழி நானுறு என்றழைக்கப்படுகிறது. தமிழில் பழமொழிக்கென்றே அமைந்த முதல் நூல் இதுவே ஆகும். இதன் ஆசிரியர் முன்றுரை அரையனார். கல்வியானது மனித மனத்தைப் பக்குவப்படுத்துகிறது.நன்மை தீமைகளை அறிந்து மனிதன் நல்வழியில் செல்வதற்கு நீதி இலக்கியங்கள் பெரிதும் துணைபுரிகின்றன. அவ்வகையில் உள்ள நீதி இலக்கியங்களில் ஒன்றான பழமொழி நானூறில் கல்வி; குறித்த சிந்தனைகளை வெளிக்கொணர்வதே இக்கட்டுரையின் தலையாய நோக்கமாகும்.
கல்வியின் சிறப்பு
கல்வி மனிதனின் வாழ்வைச் செம்மைப்படுத்த உதவுகிறது. அறியாமையை நீக்கி அறிவுப்பூர்வமாகச் செயல்பட மனிதனுக்குப் பெரிதும் துணைபுரிகிறது என்றால் அது மிகையாகாது. இதனையே
“குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து
நல்லம் யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு” (நாலடியார் பா.எண் 131)

இப்பாடல் வரிகள் மனித மனம் அறிய உண்மையாக உணரும் ஒழுக்கத்தைப் பயத்தலால் மக்கட்குக் கல்வியழகே பிற அழகுகளைக் காட்டிலும் உயர்ந்ததாகும் என்பதை நன்கு பறைசாற்றுகிறது.




கல்வியைக் கற்றலுக்கான பருவம்
கல்வியைக் கற்றலுக்குரிய இளமைப் பருவத்திலேயே கல்லாமல் வயது முதிர்ந்த பின் கல்வியில் வல்லவனாக முடியுமா? என்றால் முடியாது. எனவே காலம் கடத்தாமல் கல்வியைக் கற்பதற்குரிய இளமைப் பருவத்திலேயே கற்க வேண்டும் இதனையே
 “ ஆற்றச் சுரம் போக்கி உல்கு கொண்டார் இல்லையே இல்லை
  மரம்போகக்கிக் கூலி கொண்டார்” (பழமொழி நானூறு : கல்வி )

என்ற பழமொழி உணர்த்துகிறது. செல்ல வேண்டிய பாதையை மிகவும் கடக்கவிட்டு அவ்விடத்தைச் சென்று சேர்வதென்பதும் ஓடத்தைச் செலுத்தி நிறுத்திய பின் கூலியைப் பெறுவதென்பதும் இயலாதது. எனவே கல்வியைக் கற்பதற்குரிய இளமையில் கற்க வேண்டும். இளமையில் கற்கும் கல்வியானது பசுமரத்தாணி போல் மனதில் நன்கு பதியும் என்பதை உணர்ந்து காலங்கடத்தாமல் கற்க வேண்டும்.
கல்வியைக் கற்கும் முறை
எந்த ஒரு செயலானாலும் முறைப்டி அமையவேண்டும். கல்வியைக் கற்க வேண்டிய முறை குறித்துப் பல்வேறு இலக்கியங்களிலும் காணப்படுகின்றன. அவ்வகையில் கல்வியைக் குற்றமறக் கற்று அதன்படி நடத்தல் வேணடும் என்பதை
“ கற்க கசடறக் கற்பவை கற்றபின்
  நிற்க அதற்குத் தக” (குறள் 391)

என்கிறது திருக்குறள். புழமொழி நானூரில் கல்வியைக் கற்றவர்கள் முன்பு ஒன்றைச் சொல்லும் பொழுது குறை ஏற்படும.; மனத்தளர்வின்றிக் கல்வியைக் கற்கும்போதெல்லாம் தான் அறியாததை அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்கல்வியைக்  கற்க வேண்டும். இதனையே
“உற்றொன்று சிந்தித்து உழன்றொன்று அறியுமேல்” (பழமொழி நானூறு : கல்வி )
என்ற பழமொழி வெளிப்படுத்துகிறது.
நூலைத் தேர்வு செய்யும் முறை   
நூல்கள் நியையத் தோன்றினாலும் நல்ல நூல்களை ஆராய்ந்து தேர்ந்தெடுத்து கற்க வேண்டும். இருளை விளக்கு போக்குவதைப் போல அறியாமை என்ற இருளை நல்ல நூல்கள் போக்கும்.  விளக்குக்குத் தேவையான எண்ணெய்ää திரிää நெய் முதலானவற்றை வாங்கிய பின் அவ்விளக்கானது இருளைப் போக்கவில்லை எனின் அவ்விளக்கினால் என்ன பயன் என்பதை உணர்ந்து வாழ்க்கையில் இருள் நீங்கி ஒளிபெற வேண்டுமென்றால் நாம் அறிவுடைய நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்துக் கற்க வேண்டும். இதனையே
“ பொருளைக் கொடுத்து இருளைக் கொள்ளார் ” (பழமொழி நானூறு : கல்வி )
என்ற பழமொழி உணர்த்துகிறது.
கல்வி கரையில! கற்பவர் நாள் சில:
மெல்ல நினைக்கின் பிணிபல – தௌ;ளிதின்
ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து” (நாலடியார் பா.எண் 135)
என்ற பாடலின் வரிகளும் நூல்களைத் தேர்ந்தெடுத்துக் கற்க வேண்டும் என்பதையே வெளிப்படுத்துகிறது.

கற்றோரின் சிறப்பு
கல்வியை நன்கு  கற்றறிந்த  சான்றோர்கள் எங்கு சென்றாலும் சிறப்படைவர். காரணம் அவர் பெற்ற கல்வியறிவால் அவர்களுக்குச் செல்லும் இடமெல்லாம் விருந்தோம்பல் நடைபெறும். அவர்கள் செல்லும் இடங்களுக்கெல்லாம் உணவைக் கொண்டு செல்ல வேண்டியதில்லை. இதனையே
“ ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதுடையார்
நாற்றிசையும் செல்லாத நாடில்லை – அந்நாடு
வேற்றுநா டாக தமவேயாம் ஆயினால் 
ஆற்றுணா வேண்டுவதில்”  (பழமொழி நானூறு : கல்வி )
என்ற பழமொழி உணர்த்துகின்றது.இப்பழமொழிக்கு அரண் சேர்ப்பதாய்
யாதானும் நாடாமல் ஊராமல் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு” (குறள் : 397)

என்ற குறள் கல்விகற்றேரின் சிறப்பை வெளிப்படுத்துவதுடன் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாய் உள்ளது. மேலும்
கற்றலின் கேட்டலே நன்று
கிணற்றுத் தவளை கிணற்றுனுள்ளேயே இருந்து கொண்டு தான் இருக்கும் இடத்தைத் தவிர பிற இடங்களில் நல்ல நீர் இல்லை என எண்ணி வாழும் கிணற்றுத் தவளை போல் ஒருசில மனிதர்கள் இரவும் பகலும் பாடத்தை மனப்பாடம் செய்வதைக் காட்டிலும் கேட்டலே நன்று.
“உணற்(கு) இனிய இன்னீர் பிறி(து) உழில் என்னும்
கிணற்(று) அகத்துத் தேரைபோல் ஆகார் - கணக்கினை
முற்றப் பகலும் முனியா(து) இனிதோதிக்
கற்றலின் கேட்டலே நன்று” (பழமொழி நானூறு : கல்வி )
ஆசிரியார் பாடத்தைக் கற்பிக்கும்பொழுது மாணாக்கர்கள் கவனத்தைச் சிதறவிடாமல் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
குலவித்தை கல்லாமலே அமையும்
சிறு வயதிலிருந்தே வீட்டில் வழிவழியாக முன்னோர் செய்துவந்த தொழிலைக் குழந்தைகள் உற்று நோக்கி அவர்கள் அச்செயலை நேர்த்தியாகச் செய்வர். இதனையு  பழமொழி நானூரில் ஒரு வழக்கின் முடிவினை இளையவன் என்பதால்  ஆராய்ந்து சரியான தீர்ப்பு அமையாது உன மகமகள் கருதினார்.
“உரைமுடிவு காணான் இளமையோன் என்ற
நரைமுது மக்கள் உவப்ப – நரைமுடித்துச்
சொல்லால் முறைசெய்தான் சோழன் குலவிச்சை
கல்லாமல் பாகம் படும்” (பழமொழி நானூறு : கல்வி )

குலவித்தை கல்லாமலேயே அமையும் என்பது புலனாகிறது.

கல்வியிற் சிறந்தோரை தேர்ந்தடுத்தல்
கல்வியறிவில் சிறந்தவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால் கல்வியறிவில் சிறந்த சான்றோர்களைக் கொண்டுதான் தேர்வு செய்ய வேண்டும்.
“புலமிக்கவரைப் புலமை தெரிதல்
 புலமிக்கவர்க்கே புலனாம்
……………………………
 பாம்பின் கால் பாம்பறியும்” (பழமொழி நானூறு : கல்வி )

என்ற வரிகளில் பாம்பு சென்ற வழித்தடத்தை அதற்கு இனமான பாம்பால் தான் அறிய இயலும் .என்பதிலிருந்து  கல்வியறிவால் சிறந்தவர்களால் தான் நன்குசிறந்தவர்களைத் தேர்வு செய்ய இயலும் என்பது புலப்படுகிறது.
நல்லோரை இனங்காணல்;
நற்குணம் உடையவர்களை இனங்காண வேண்டுமென்றால் அவர்களைவிட கல்வி ஒழுக்கங்களில் சிறந்தவர்களாலே தான் அறிய இயலும் என்பதை
“நல்லார் நலத்தை உணரிந் அவரினும்
 நல்லார் உணர்ப பிறருணரார் - நல்ல
 மயிலாடு மாமலை வெற்பமற்(று) என்றும்
 அயிலாலே போழ்ப அயில் ”  (பழமொழி நானூறு : கல்வி )

கடினமான இரும்பை இரும்பைக் கொண்டுதான் பிளக்கமுடியும் என்ற பழமொழி உணர்த்துகின்றது.
 நிறைகுடம் நீர் தழும்பாது
கற்றறிந்த சான்றோர்கள் அவையிலே அடக்கத்தைக் கடைபிடிப்பர். நூல் அறிவும் அனுபவ அறிவும் இல்லாதவர்கள் அடக்கத்தைக் கடைபிடிக்காமல் தம்மைத் தாமே புகழ்ந்து கொள்வர். அறிவுடைய சான்றோர்கள் மாசற்ற செயல்களையே செய்வர். இதனையே
“நிறைகுடம் நீர் தழும்பல் இல்” என்ற பழமொழி வெளிப்படுத்துகிறது.
“உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையாரே கல்லாதவர்” (குறள் : 395)

என்ற குறளும் வலு சேர்க்கின்றது.
தொகுப்புரை

  • காலம் கடத்தாமல் கல்வியைக் கற்பதற்குரிய இளமைப் பருவத்திலேயே கற்க வேண்டும்.
  • மனத்தளர்வின்றிக் கல்வியைக் கற்கும்போதெல்லாம் தான் அறியாததை அறிந்துகொள்ள வேண்டும் என்பதை உணர்ந்து கற்க வேண்டும்.
  • அறிவுடைய நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்துக் கற்க வேண்டும்.
  • கல்வியை நன்கு  கற்றறிந்த  சான்றோர்கள் எங்கு சென்றாலும் சிறப்படைவர்.
  • இரவும் பகலும் பாடத்தை மனப்பாடம் செய்வதைக் காட்டிலும் கேட்டலே நன்று.
  • குலவித்தை கல்லாமலே அமையும்.
  • நற்குணம் உடையவர்களை நற்குணம் உடையவர்களாலேயே    இனங்காண இயலும்.
  • கற்றறிந்த சான்றோர்கள் அவையிலே அடக்கத்தைக் கடைபிடிப்பர்.








No comments:

Post a Comment